Malegaze (III)
எதற்கு இந்த பதிவை தொடர்கிறீர்கள்...?
காதல் திருமணங்களில் விவாகரத்துகள் அதிகமானதாக உச்சநீதிமன்றம் கூறிய கருத்திற்கும் இந்த பதிவிற்கும் என்ன தொடர்பு என்று நண்பரின் கேள்விக்கு நானளித்த பதிலோடு தொடங்குகிறேன்.
இந்த சமூகத்தில் நிலவும் எல்லா பாகுபாடுகளும், மதத்தின் பெயரால், கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி உருவானவை தான். அதில் வெளித்தோற்றத்தில் பெரிய பாகுபாடு சாதிய பாகுபாடு. மறைமுகமாக வெகு இணக்கமாக பயணிப்பது பாலின பாகுபாடு.
ஒவ்வொருவருக்கும் தனித்தனி வாழ்க்கை உண்டு. துணை என்பது ஒருவருக்கொருவர் அந்த வாழ்க்கையை வாழ துணைபுரிவதற்காக பாலுணர்ச்சிகளைத்தாண்டி, வாழ்தல் குறித்த பயத்தால், நம்பிக்கையால் பிறந்த
காதலால் உருவான கட்டமைப்பு. நம்பிக்கை தவறும் சூழலில் துணைகள் பிரிகிறது. இது இயல்பான ஒன்று.
கடவுள் பெயரால் கட்டமைக்கப்பட்ட பாலின பாகுபாடு, மற்றும் கட்டுப்பாடுகளால் ஒரு பாலினத்திற்கு மட்டும் நம்பிக்கை இழந்த பின்னரும் இணைந்து வாழ வேண்டிய நிர்பந்தத்தை கொடுக்கிறது. அந்த கட்டுப்பாடுகளையும், நிர்பந்தத்தையும் பயன்படுத்தி,ஒரு பாலினம் ஆதிக்கம் செலுத்துவதும், மறைமுகமாக அடிமைப்படுத்துவதும் தொடர்கதையாகிறது.
வாழ்க்கைத்துணை என்பது வாழ்க்கைக்கு துணையே தவிர, வாழ்க்கையை வாழ்வதற்கு அல்ல... இங்கு பல பெண்களின் வாழ்க்கையை வாழ்க்கைத்துணை என்ற பெயரில் வாழவிடாமல் செய்கின்றவர்கள் ஆண்கள் தான்.
ஆணுக்கு என்ன வேண்டுமானாலும் எதிர்பார்ப்பு இருக்கலாம், கனவு இருக்கலாம். ஆனால் பெண்ணுக்கு அதிகபட்ச எதிர்பார்ப்பு ஆணாகத்தான் இருக்கவேண்டும் என கட்டமைத்தது இந்த மதங்களும், இலக்கியங்களும்....
அதனால்தான் எல்லா சாதியவாதிகளுக்கும், காதலும் கசக்கும். பெண் சுதந்திரமும் கசக்கும்.
ஒரு பெண் தன் சுதந்திர வாழ்க்கையில் எடுக்கும் எல்லா சுதந்திரமான முடிவுகளும், இந்த சமூகம் கட்டமைத்த அத்தனை கட்டுபாடுகளுக்கும் எதிராக அமையும்... என்பதாலேயே புரட்சி வருமென்று அவ்வப்போது சில சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வார்கள்...
நாடக காதல் என தொடர்ச்சியாக பழி சொல்லும் சமூகம் பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க கூறி முயற்சிக்கலாமே...?
பெண்ணின் திருமண வயது 18 என்பதை 23/25 ஆக மாற்ற முயல்வார்களா...?
18 என்பதே சட்டம் நிர்ணயித்த பிறகுதான், இன்னும் பல குழந்தை திருமண முயற்சிகள் நடந்துகொண்டு தானே இருக்கிறது... இதற்கு யார்பொறுப்பு, நம்பிக்கையற்ற பிள்ளைக்காதல் என பெயரிடுவோமா...?
ஆணின் நிர்வாணத்தை எளிதாக கடந்து போகும் சமூகம், பெண் என்றால் விமர்சனக்கணைகளோடு காத்திருக்கும்... நிர்வாணம் வேறு, ஆபாசம் வேறு என்ற அடிப்படை அறிவற்ற மூடர்கூட்டம்.
உணர்ச்சிகளால் உந்தப்படும் காம உணர்விலும் கூட, பாலின பாகுபாடு காத்திருக்கும். கணவன் மனைவியாக இருந்தால் கூட தன் புணர்ச்சி தேவையை பெண் கூறினால் என்னவாகும்...? ஆணுக்கு மட்டும் அத்தனைக்கும் வளைந்து கொடுக்கச் சொல்லும்....
ஆண் மது அருந்தினால்,புகைபிடித்தால்,போதை பொருட்களை பயன்படுத்தினால், ஒழுக்கக்கேடாக ஒருபோதும் கருதாது. பெண்னென்றால் புதுப்பெயரோடு காத்திருக்கும்...
பெண்ணின் பிறப்புறுப்பில் கற்பை ஒழித்து வைத்தவன், ஆணின் விரைப்பையில் கற்பை வைக்க தவறியதேன்...?
60,000 மனைவி கட்டினான் தசரதன், ஆனாலும் குழந்தை வேண்டி யாகம் செய்தான் என்ற போதும், ஒரு மனைவியுடன் வாழ்ந்த ராமனை பெருமையுடன் ஏகபத்தினி விரதன் என அடையாளப்படுத்தியபோதே,
விபச்சாரம் என்றால் என்ன என்று பாலினபாகுபாடு இல்லாமல் விளக்கியிருந்தால், அத்தனை மன்னர்களும் பல மனைவிகளுடன் பயணித்திருக்க மாட்டார்கள்...
பெண்ணின் உடலில் தான் மானத்தை, ஒழுக்கத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை கட்டி வைத்திருக்கிறார்கள்...
ஆணுக்கு எதுவும் இல்லை, எந்த உணர்ச்சியையெல்லாம் ஆணால் கட்டுபடுத்த முடியவில்லையோ.... அவையெல்லாம் பெண்ணுக்கான கட்டுபாடாக்கி போனார்கள்...
தன் உடல்தேவையை பூர்த்தி செய்யாமல், உள்ளத்தேவையை புரிந்து கொள்ளாமல் பயணிக்கும் துணையாக பலரின் வாழ்க்கைத்துணை அமைந்திருக்கிறது.
தன் வாழ்க்கை துணையை கூட, சமமாக கருதாத ஒருவனால், மற்றவர்களை எப்படி சமமாக கருத முடியும்...
இணைந்திருந்து துன்புறுவதை விட, புரிதலோடு பிரிவதே மேல் என்பதும் கூட காதல்தான்... எனவே காதல் திருமணங்களில் இன்னமும் கூட அதிகரிக்கலாம் தவறில்லை... என்ற விளக்கத்தோடு முடித்திருப்பேன்...
ஆனால் இது எங்கிருந்து வந்தது என வரலாறை அறிய முயற்சிக்கும் பலருக்கும் பயன்தருவதோடு,
என்னமோ தமிழ் இன வரலாறு, ஈழத்தமிழர்களை வைத்து ஈனத்தன பிச்சையெடுத்து வாழும் சீமான் என்ற ஒருவனுக்கும், நாம் தமிழர் என்ற நயவஞ்சக கட்சிக்கும் தான் தெரியுமென்ற அகங்காரத்தை வேரறுக்க தொடர்கிறேன்...
இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி....
மலையில் தாய் தெய்வம் பரையின் வழிவந்த பரையர்களாகி,
கடலில் தாய் தெய்வம் பரவை வழிவந்த பரவையராகி,வாழ்தல் பொருட்டு சேயொன் தலைமையேற்று, கானகத்தில் நிரைகளோடு ஓட்டம் கண்டு ஓட்டன்களாகி, காடு திருத்த நிரை பூட்டிய பூட்டன்களாக, காடு திருத்தி கழநீ கண்டு பாடுபட்டு பயிர் செய்து பாட்டன்களாக நிகழ்கால தேவைகளுக்காக வாழ்ந்த, மனித இனத்தில் தோன்றிய ஆசைகளால் பிற தொழில்கள் பிறந்தது.
எப்படி, பரத்தையர் தவறான பெண் என்ற பொருளை உண்டாக்கி,தவறாக சித்தரிக்கப்படுகிறதோ, அதுபோல பரவையர் என்பதும் தவறான பெண் என்ற பொருளை தரும் சொல்லாக்கி பரதவர், பரதர் என வேறு பெயர்களை உருவாக்கினார்கள்...
இந்த பரத்தையர், பரவையர் என்பதை தவறான பெண்ணாக பொருள்பட வைத்ததில் இலக்கியங்களின் பங்கு இன்றியமையாதது.
பரம்பரை - பரன் + பரை என, சிவனை மையப்படுத்தி பரன், பரமன், பரம்பொருள் என மையப்படுத்தி ஆணாதிக்கத்தை உருவகப்படுத்தின பக்தி இலக்கியங்கள்.
பரவையும், பரையும் தான் முதல் பெண் தெய்வங்கள்...
பரவையரும்,பரையரும் தான் தொல்குடிகள்.
பரையை, இலக்கியங்கள் உதவியுடன் கொற்றவை என பாலை நில தெய்வமாக்கிய பிறகும்,
பாலையையே அறியாத மக்கள்,
தாங்கள் வசித்த மலை,கடல்,காடு,நிலம் என எல்லா நிலங்களுக்குள்ளும்,எல்லா இனக்குழுவுக்குள்ளும் மாறாத வழிபாடாக தாய் தெய்வ வழிபாடு அமைத்திருந்ததையடுத்து,
சாக்தம் என புதிய பெயரிட்டு,பார்வதி, பராசக்தி என வெவ்வேறு பெயர்களை பின்னாளில் வழங்கியதோடு கூடவே, சிவனையும் இணைத்தே கதைகளை எழுதின பக்தி இலக்கியங்கள்...
பார் என்றால் உலகம்,
வதி என்றால் பெண்.
பதி என்றால் ஆண்...
( உமாபதி, திருப்பதி என உதாரணம் காட்டி,பதி என்றால் கணவன் என கதையளப்பார்கள்.
அப்படி என்றால் கணபதி என்றால் கணத்தின் கணவனா என கேளுங்கள்.... (
பராசக்தி - பரை + சக்தி
இங்கிருந்த நம்பிக்கைகளை வைத்து பக்தி இலக்கியங்கள் மிக எளிதாக பாகுபாடுகளை கட்டமைத்தது. அலைமகள், மலைமகள் என பின்னுக்கு தள்ளி கலைமகளை முன்னிலைபடுத்தி
கல்வி, செல்வம், வீரம் என வரிசைப்படுத்தி தெளிவாக ஏமாற்றிப்போனதில் பக்தி இலக்கியங்களின் பங்கு இன்றியமையாதது.
அதிலும் தெளிவாக கலைமகள் என்று சரஸ்வதியையும், அவள் கணவனாக பிரம்மனையும்,
அலைமகள் என்று லெக்ஷ்மியையும், அவள் கணவனாக விஷ்ணுவையும்,
மலைமகள் எனும் சக்தியையும், அவள் கணவனாக சிவனையும், கூறியதுடன், முதலில் சக்தியை, சதி என்று அழைத்து,
அவள் தன் தந்தை, தன் கணவனை அவமதித்தற்காக தன்னைத்தானே தீயில் அழித்ததாக கதை எழுதி,அந்த கதையை வைத்துத்தான் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை கடைபிடிக்க செய்தார்கள். அதன்பிறகு பார்வதி என பெயரிட்டார்கள்.
இதுபோல பல கதைகளை மையப்படுத்தி சமயங்கள்,மதங்கள் என மண்ணிற்கு தொடர்பற்றவற்றால், பாலின,சாதிய பாகுபாடு உருவானதில் பக்தி இலக்கியங்களின் பங்கு இன்றியமையாதது.
சமணமும், பௌத்தமும் அரசுகள் அமைந்த பிறகு வணிக தொடர்பால் வந்தது என ஏற்கனவே கூறியிருந்தோம். முதலில் வணிகம் எப்படி உருவானது என்பதை அறிவோம்
அத்தியாவசிய தேவைகளுக்கு உருவான அடிப்படை தொழில்களை தாண்டி, நிலையான வசிப்பிடம் ஆசைகளை உருவாக்கியது, ஆசைகளால் உருவான ஆடம்பர தேவைகள் பிற தொழில்களை உருவாக்கியது. பிற தொழில்கள் உருவான பிறகு வணிகம் பிறந்தது.
வாழ்தலுக்கான அடிப்படை தேவைகளுக்கான தொழில்கள் இருந்தவரை,
ஒரு தலைவனை கொண்டு
ஒரே இனக்குழுவாக இருந்தவர்கள்,
பொருப்பன் என்ற வேடுவர், வெற்பன் எனும் குறவர், சிலம்பன்,கொடிச்சி எனும் திணைப்புலக்காவல் புரிபவர்கள், காதல் கொண்டு துணைநாடிய நாடன்,
என மலையில் வாழ்ந்த
அனைவருமே தாய் பரையின் சேய்கள், சேய்வழி வந்த சேயர்கள் தான் பின்னாளில் மலைநாட்டை ஆண்ட சேரர்கள் ஆனார்கள்.இவர்கள் தலைவனை ( சேய் + ஒன்) சேயொன் என அழைத்தார்கள்.
இலக்கியங்கள் சேயொனை சேயோன் என்றது. எப்படி பாலின பாகுபாட்டை கட்டமைக்க பரைக்கு பரனை கொணர்ந்தார்களோ, அது போல சேயோள் என்ற சொல் பயன்பாட்டை உருவாக்கினார்கள்...
கானுறை வாழ்ந்த நிரை மேய்த்த ஆயர்கள்,
நிரை காவல்புரியும் கள்ளர்கள்,
ஆடு, மாடு, பாம்பு, உடும்பு, நெருப்புக்கோழி, மான் போன்றவற்றின் தோல்களைப் பதப்படுத்தி
தொழில் புரிந்த பகடைகள், பனைத்தொழில் புரிந்த சாணார்கள், இவர்கள் அனைவருமே இடையர்கள். இவர்களின் தலைவனை கோன் என்றனர்.
[ இயற்கையை குறிக்கும் ஒன் என்பதை, கானகம், காடு, கள்ளர், கள்ளு, என "க"வின் பயன்பாடு அதிகரித்து
க்+ ஒன் = கொன் என்பதே கோன் ஆனது.
அந்த "ஒன்" தான் பின்னாளில் ஆண் ஆனது என என்பதை ஏற்கனவே கூறியிருந்தோம்.
* பகடை என்பது காட்டு விலங்குகளைப் பிடிக்க காட்டின் நடுவே கட்டி வைக்கப்படும் இரைகளை குறிக்கும்.
* சாணம் என்பது நாராலாகிய பொருளை குறிக்கும். பனை நாரில் பொருளை தயாரிப்பவர். ]
பின்னர் வந்த இலக்கியங்கள் தான் கானகத்திற்கு முல்லை என பெயரிட்டது. கோனை மாயோன் என மாற்றியது.
ஆடம்பர தேவைக்கான பிற தொழில்கள் உருவான பிறகு தொழில் ரீதியாக அடையாளப்படுத்த தொடங்கினர்.
வேளாண்மை தொழில் புரிபவன், வேளாண்மையை காவல் காத்தவன், தச்சுவேலை செய்பவன், நெசவு செய்பவன்,உலோகங்கள் கண்டுபிடித்த பிறகு கொல்லன், இந்த தொழில்களால் வணிகனும் உருவானான்.வணிகம் உருவானதால் போக்குவரத்திற்கு நிரைகளை பழக்கப்படுத்த வேண்டியதானது.
................தொடரலாம் அடுத்த பதிவில்.......
- சாய்.S.சுரேஷ் குமார்
+91 - 8344 00 2855
Comments
Post a Comment