Male Gaze

 #பாச_உணர்ச்சியா

#பாலுணர்ச்சியா,


பெண்ணிய ஆதரவாளராக பேசினாய், காஞ்சிபுரத்தில் நடந்த கொலை, மற்றும் சில திருமணத்திற்கு பிந்தைய காதல் கொலை குறித்த பல பத்திரிக்கை தகவலை சேகரித்து, பெண்களை குற்றம் கூறி, இதைத்தான் பெண்ணை அடக்கி வைக்கணும், பெண்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என பெரியவர்கள் கூறினார்கள்... தொடர்பு கொண்டது முகம் தெரியாத, பெயர் கூற துணிவற்ற மூடன்...


             🌹🌹🌹🌻🌹🌹🌹🌻🌹🌹🌹


அட அரைவேக்காடே,

             நான் பெண்ணிய ஆதரவாளனோ, ஆணிய ஆதரவாளனோ என உன் கற்பனைக்கு என்னை உருமாற்றாதே... 


நான் எந்த #இய ஆதரவாளனும் இல்லை, நான் இயங்களை எதிர்ப்பவன்...இயல்பை நேசிப்பவன்... நாகரீக வளர்ச்சிக்கு பின்னும் விலங்கு தோலுரிக்க மறந்த பல மிருகங்களின் கூடாரம் தான் மனித சமூகம்...


ஏன் பெண், பெண் என இத்தனை வன்மம்...அங்கே பெண் மட்டும் தான் தவறி நிற்கிறாளா...? 


கட்டிய கணவனுக்கு துரோகம் என புலம்புகிறாய்... 


ஏன் கட்டி வைத்து அவள் உணர்வை சிறைபடுத்திய கணவன் குற்றவாளி இல்லையா...?


கணவன் தான் முதலில் கட்டினானா....?


பெண்ணின் முதல் மாதவிடாய் அவள் பருவமெய்தியதை குறித்தால், அன்றைய தினம் தொட்டு, அத்தனை உணர்வுகளையும்,கட்டுகிறது பெற்றோரும் சமூகமும்...


சரி அந்த கட்டை அவிழ்க்க திருமணமான பிறகு புது உறவாவது தன் உணர்வுக்கு மதிப்பளிக்கும் என்ற கற்பனையோடு, அடுத்தக்கட்டு..


குழந்தைகளோடான உலகம், அங்காவது தன் உணர்வு மதிக்கப்படும் என்றெண்ணி அடுத்தக்கட்டு.., 


எல்லாக்கட்டையும் பெண்ணுக்கு மட்டுமே அளித்த சமூகம், ஆணுக்கு எந்த கட்டும் கட்டவில்லையே...!


கல்வி, குடும்பத்திற்கு பொருளீட்டல் என எத்தனை கட்டு தெரியுமா என சப்பைக்கட்டு கட்டாதீர்கள்...!


இந்த கட்டுக்கள் ஆணுக்கு என்று யார் வகுத்தது.., கல்வியும்,வேலையும் பெண்கள் செய்ய ஒருபோதும் அவர்கள் தயங்கியதில்லை... இவை வாழ்வதற்கான காரணிகளே தவிர கட்டுக்கள் அல்ல...


எந்த இடத்தில் ஆண் தன் உணர்வை கட்டுகிறான்... 


ஏன் நீ பத்திரிக்கை செய்தி தந்தாயே, திருமணத்திற்கு பின் இன்னொரு ஆணுடன் காதல் என்று...


அங்கே இன்னொரு ஆணும் தன் உணர்வை கட்டுப்படுத்தாமல் நிகழ்ந்த நிகழ்வில், பெண்ணை மட்டும் கட்டுப்படுத்த நினைப்பது என்ன மடத்தனம்...!


பெண்கள் சதைபிண்டங்கள், காம உணர்வை கட்டுப்படுத்த தெரியாத ஆணின் பார்வைக்கு... இங்கே காமம் என்ற உணர்வை கட்ட வேண்டியது ஆணுக்கா, பெண்ணுக்கா...?


அந்த பிள்ளைகளின் வாழ்க்கை என்னவாகும் என எண்ணுகிறீர்களே, நீங்கள் விமர்சிக்காமல் இருந்தால், அவர்கள் வாழ்க்கை நிச்சயம் சிறப்பாகும்...


அதற்குத்தான் நீங்கள் இடமளிக்க மாட்டீர்களே...


இனி அந்த பிள்ளை, ஆணாக இருந்தால், குழந்தைதனமாக நடந்தால் என்ன பேசுவீர்கள்...? 

பெண் பிள்ளையாக இருந்தால் என்ன பேசுவீர்கள்...?


அந்த குழந்தைதனத்தை கொல்லப்போகிறது,உங்கள் விமர்சனங்களே...நீங்களும் கொலைகாரர்கள் தான்...? அனுதாபப்பட அருகதையற்றவர்கள் நீங்கள்...


இங்கே தவறிழைத்த பெண் உங்கள் பார்வையில் உடல் ஆசையை கட்டுப்படுத்தாத சதைப்பிண்டம், ஆனால்,எனக்கோ உணர்வை வெளிப்படுத்த கிடைத்த உறவாக நம்பி ஏமாந்த பெண்மை தெரிகிறது... 


அவளுக்கு தன் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த கிடைத்த உறவு, ஆனால் அவனின் காம உணர்வுக்கு அவள் சதைபிண்டம்...நிச்சயம் அவன் உங்களில் ஒருவன்தான்...


அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.., வாய்ப்பில்லை என்ற கோபமே பெண் மீதான வன்மம்..இதுவரை இதுபோன்ற நிகழ்வுகளில் பெண்ணை தூற்றியவர்கள், தவறிழைத்த ஆணை தூற்றியிருக்கிறீர்களா..? 


ஆம்பளைனா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்...? 


பாலியல் வழக்குகள் குறைய காரணமே இதுபோன்ற மனநிலைதான்... 


பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தால், குற்றவாளியை கூட ஆண் என்பதால் சமூகம் அடையாளப்படுத்துவதில்லை...அவன் நீதிமன்ற தண்டனை பெற்றே திரும்பினாலும் அவமானம் கொள்வதில்லை..! 


ஆனால் பாதிக்கப்பட்ட சமூகம் முழுதும் அடையாளமாகிறாள்...விமர்சனங்களை எதிர்கொள்ள தயங்கி அவமானம் சந்திக்கிறாள்...இந்த அவமானத்திற்கு பயந்தே பல பாலியல் புகார்கள்கூட வழக்காவதில்லை... 


ஆண் என்பதால்,குற்றம் செய்தவனுக்கு சுகந்திரமும்.., பெண் என்பதால் பாதிக்கப்பட்டவள் அவமானமும் தருகிறது சமூகம்...


இது எப்படி பெண்களுக்கு பாதுகாப்பான சமூகம் என வெட்கமில்லாமல் பேசுகிறீர்கள்..? 


போக்சோ சட்டங்களுக்கு பிறகே நகர்புறங்களில் குழந்தைகளை கூட சதைபிண்டமாக பார்த்த சில கயவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள்...இன்னும் அவமானங்களுக்கு பயந்தும், கிராம புறங்களில் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் பல கயவர்கள் உத்தம வேடம் தரிக்கிறார்கள்....


நீங்கள் படிக்கும் இந்த செய்திகள் வரும் அதே நாளேடுகளில், சில செய்திகளை குறிப்பிடுகிறேன்...


சென்ற வாரம், நாகர்கோவில் நேசமணிநகர், காவல்நிலைய எல்கைக்குட்பட்ட நெசவாளர் காலனியில், பெண் தன் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்தார்... விசாரணையில் கணவர் இறந்த பின், வாழ வழி தெரியாமல்....


இந்த #வாழ_வரி_தெரியாமல் என்ற வார்த்தையின் பொருள் புலப்படுகிறதா...? நீங்கள் தான், பெண்ணை இழிவு படுத்த, சில பத்திரிக்கை செய்திகளை கொண்டு முடிவு செய்கிறீர்கள்...


மற்றொன்று, பெரியார் மாவட்டத்தை சேர்ந்த நண்பர், இயற்கையை நேசிப்பவர், அதே போல் மனைவியையும், திருமணத்திற்கு பிறகு தன் மனைவியை உணர்ந்து படிக்க வைத்தார்... 


திடீரென குரங்கனி தீ விபத்தில் நண்பர் இறந்தார்... தன் உணர்வை மதித்த இணையின் பிரிவை ஏற்றுக்கொள்ளாமல் அந்த சகோதரி, 1 &1/2 வருடங்களுக்கு பிறகு தற்கொலை செய்து கொண்டார்...


இங்கே தன் உயிரை விட, தன் உணர்வை மதிக்க தன் கணவரைவிட யாராலும் முடியாது என தீர்மானிக்கவே இந்த 1&1/2 வருட இடைவெளி... 


இந்த இடைவெளியில் அந்த நம்பிக்கையை ஏன் இந்த சமூகம் விதைக்கவில்லை...?  இணையின் உணர்வை மதிப்பதால் மட்டுமே, பிரச்சணைகளுக்கு தீர்வுகாண முடியுமே தவிர, 


கட்டிவைத்து, கட்டுப்பாடு விதித்தால்... முழு கொள்ளளவையும் தாண்டினால் நிச்சயம் மிகப்பெரிய அழிவிருக்கும்....அணைக்கும் சரி ஆசைக்கும் சரி....


                               - சாய்.S.சுரேஷ் குமார்

                                    +91 - 8344 00 2855

Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்