Male Gaze -01

 

#Malegaze..

கடந்த வாரம் உச்சநீதிமன்றம், விவாகரத்து தொடர்பான வழங்கு ஒன்றில்,

பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களில்தான் நடக்கின்றன,
என கருத்து தெரிவித்திருந்தது...!

இது தொடர்பாக நண்பர் தொடர்புகொண்டு நிறைய கேள்விகளை எழுப்பினார்...? மிக நீண்ட விவாதங்களில்,
என் பதில்களை ஒரு பதிவாக பதிவிடுகிறேன்....

விவாகரத்துகள் பெரும்பாலும் காதல் திருமணங்களில் நடப்பதாக கூறிய நீதிமன்றம்,

காதல் என்றால் என்ன..? என்பதற்கும் விளக்கம் தந்திருக்கலாம்... அதை ஏனோ எந்த நீதிபதிகளும் கூறுவதில்லை...

இந்த சமூகத்தில், காதல் சார்ந்த ஒருவித பதற்றத்தை நீதிமன்றத்தின் இக்கருத்துக்கள் ஆழவிதைத்து செல்லும்.

இந்த நாகரீக மானுட சமூகத்தில்..,
முதலில் தோன்றிய பாகுபாடு
எதுவெனில், பாலினபாகுபாடு தான்....

உலகில் முதலில் தோன்றிய சாதி எதுவெனில், அது பெண்சாதி...

ஆண்மை, பெண்மை என்ற "மை" விகுதிக்குள் அடைக்கப்பட்ட போதே அடிமைத்தனம் தொடங்கிவிட்டது.

வேட்டை சமூகமாக இருந்தவரை,
துணையென்ற சார்பு வாழ்க்கை அவசியமற்றதாகிப்போனது.

தன் உணவை தானே தேடிக்கொண்டு, தன் தேவைகளை தானே தேடிக்கொண்டு, நிவர்த்தி செய்யும் வரை பாகுபாடு இல்லை.

புணர்ச்சி எனும் உணர்ச்சிகளின் தூண்டுதலுக்கே ஒருதுணை அவசியமானது...

கர்ப்ப காலங்களில் மட்டும் சார்பு வாழ்க்கை வாழவேண்டியிருந்தது.

சக பாலூட்டி இனங்களில், குழந்தை பருவம் மிகுதியானது மனித இனம்தான்... எனவே தாயுக்கும் சேயுக்குமான சார்பு வாழ்க்கையாக தொடங்கியது மனித பரிணாமம்.

குறைந்தபட்சம் 13 - 19 ஆண்டுகள் வரை தாயின் பராமரிப்பில், சார்பு வாழ்க்கை வாழ வேண்டிய சூழல் உருவானது. எனவே தாய்வழி சமூகமாகத்தான் மானுட சமூகம் உருவானது.

அதன் பிறகு, இயற்கை பேரிடர்கள் மற்றும்  வன விலங்குகள் பயத்தால்,காடோடி குழுவாக வாழ தொடங்கினர்.

ஆனாலும் தொடர் அச்சுறுத்தலில், குழுவின் தொடர் பயணத்துக்கு, விலங்குகளை எதிர்க்கும் திறன்மிகுந்த ஒருவன் தலைவன் ஆனான்.

அந்த தலைவனின் சொற்படி கேட்டு எளிய விலங்குகளை விரட்டி, வலிய விலங்குகளிடமிருந்தும், பேரிடர்களிலிருந்து விலகி, வாழ தொடங்கினார்கள்.

குறிஞ்சி நிலத்தலைவன் சேயோன் என்பதன் மூலமே தாய்வழி சமூகமாக தோன்றியது தான் மனித இனம் என்பது தெளிவாகிறது.

தாயுக்கும் சேயுக்குமான சார்பு வாழ்க்கையில், சேய் தற்சார்பு வாழ்க்கைக்கு பழக்கமாகும்வரை அதன் தேவைகளை நிறைவேற்றியது தாய்தான். இது எல்லா உயிர்களிடத்தும் காணப்படும் நிகழ்வு.

அதன்பிறகு உணர்ச்சியால் உருவான புணர்ச்சியை தாண்டி,உணவு, பாதுகாப்பு என தேவைகள் சார்ந்து காதல் பிறப்பெடுத்தது.

இரை கிடைக்காதவர்கள், ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சூழல் உருவானது. விலங்குகளை விரட்டுவதே/வேட்டையாடுவதே ஆகச்சிறந்த வீரமாக கருதப்பட்டது.

இப்படி பயம் கொண்ட,வேட்டை சமூக வாழ்க்கையில், பயத்தை நீக்குவான் தலைவன் என்ற நம்பிக்கை விதைத்துதான் காதல் பிறந்தது.

முதல் காதல் என்பது குறிஞ்சி நிலத்தில், தலைவன் மீதான காதல்தான்.
( சேயோன் முருகன், குறமகள் வள்ளி.)

காதல் பிறந்ததும், கடவுள் பிறந்ததும்  பயத்தாலும், நம்பிக்கையாலும் தான்.

கோவில் ( கோ + இல் ) என்பதும்
மலை கடந்து, காடு கண்டு, நாடு கண்ட பின் திணை(நிலம்) பிரிந்த பின் இனக்குழுக்களாக வாழும் சூழலில் அந்தந்த நில தலைவனின் வீடு என்ற அடிப்படையில் உருவானது தான்.

( கோ என்றால் தலைவன், இல் என்றால் வீடு.)

பாதுகாப்பு என்ற நம்பிக்கை தந்து,பசி எனும் உணர்ச்சிக்கு உணவளித்ததற்கு ஈடாக, துணை எனும் நம்பிக்கை தந்து புணர்ச்சி எனும் உணர்ச்சி பரிமாறப்பட்டது. அப்போதும் பாலினபாகுபாடு இல்லை.

மனித சமூகத்தில், பெண்ணுக்கு உடல் நளினம் சார்ந்தும், ஆணுக்கு உடல் வலிமை சார்ந்தும் முரணாகி நிற்கிற
அழகு, விலங்கு மற்றும் பறவை இனங்களில் முரண்படுகிறது.

வேட்டை உயிரினங்களில், புலி, சிங்கம், சிறுத்தை போன்றவற்றில் பெண்கள் தான்,அதிகம் வேட்டையாடும். அழகென்று வர்ணிக்கப்படுவது ஆண்சிங்கம், ஆண்மயில்களைத்தான்.

அப்படி பயத்தாலும்,நம்பிக்கையாலும் பிறந்த காதலால் தான்,
புணர்ச்சி என்ற உணர்ச்சியை தாண்டி, தன் துணை என்ற எண்ணம் பிறந்தது. நாகரீகம் பிறந்தது.

உணவு, பாதுகாப்பு என இருவருக்குமான தேவையை உணர்ந்து, ஒருவருக்கு ஒருவர் உதவும் சூழல் பிறந்தது. வாழ்தல் பொருட்டு பயணம் கண்டார்கள்.

குறிஞ்சியை கடந்து பிற நிலங்கள் பிறந்தது.

மலையில் நிலவிய தொடர் விலங்குகளின் அச்சுறுத்தலால், தன்னால் கட்டுப்படுத்த முடிந்த எளிய விலங்குகளை (மாடு, ஆடு, பூனை, நாய்,) துணையாக்கி கொண்டு, மலை கடந்து காடு கண்டார்கள்.

வேட்டை சமூகத்தில் பெண்தான் பிரதாணமாகிறாள்.

காட்டு விலங்குகள்(Wild Animals), நாட்டு விலங்குகள்(Domestic Animals) என்றதுதான் முதல்பாகுபாடு, அதுவும் மனிதன் உருவாக்கியது தான்.

எந்த விலங்குகளை அடிமைப்படுத்த முடிந்ததோ,அவை நாட்டு விலங்குகளாகி போனது.

அந்த விலங்குகளும் தன் சுயமறியாது, சார்பு வாழ்க்கைக்கு பழக்கமானது. இயல்பாக  மேய்ந்து(ஆடு,மாடு,கழுதை), வேட்டையாடிய(நாய்,பூனை) விலங்குகள், அடிமை வாழ்க்கையில், சார்பு வாழ்க்கைக்கு பழக்கமானது.

மலைகளில் வேட்டையாடி வாழ்ந்தவனுக்கு, காடுகளில் அத்தகைய சூழல் இல்லை, அடிமைப்பட்ட விலங்குகளை உணவாக்கி வாழ்ந்தான். அதற்காக அடிமைவிலங்குகளோடு, கால்நடந்து மேய்ச்சல் தொழில் மானுட சமூகத்திற்கு அறிமுகமானது.

விலங்குகள் உணவு தேவைக்காக கால் நடக்க, அதனை தன் தேவைக்காக பாதுகாக்க மனிதன் கால் நடந்ததற்கு விலங்குகளுக்கு, கால்நடை என பெயரிட்டான்.

மேய்ச்சல் மட்டும் உணவு தேவைக்கு பயன்தராது என்ற சூழலில் தான், பால் அறிமுகமானது. உணவு தேவைக்காக காட்டு கனிகள், கிழங்குகள் என தாவரங்களின் சார்பு அவசியமாகிறது.

விதைகளிலிருந்து பயிர் முளைவிடுவதை காடுகளில் தான் அறிகிறான். காடுகளில் பயிரிட பழகுகிறான். ஆனால் ஒவ்வொரு தாவரங்களும், பலன்தரும் காலம் முரண்படுகிறது. குறுகிய காலத்தில் பலன்தரும் பயிர்களின் தேடல் தொடங்கியது.

கனியற்ற, காயற்ற, பயிர்களில் பயனற்றவையாக மனிதன் கருதியவற்றிலிருந்து, மேய்ச்சலுக்காக மட்டுமே பயன்பட்ட பயிர்களிலிருந்து
அவை தானாக வெளிப்பட்டன. அவைதான் தானியங்கள்.

(தானியம் :- தான் + இயம்) இயம் என்றால் வெளிப்படுவது.)

மாயோன் மேய காடுறை உலகம் என மாயோன் என முல்லை நிலத்தலைவனை அழைக்கிறது தொல் காப்பியம்.

மாய் என்பதற்கு மறைதல் என்று பொருள். 
( மேய - என்றால் எல்லை )

மேய்த்தல் பொருட்டு கதிரவனுக்கு மறைந்திருந்தவன்,
கதிரவன் மறையும் வரை, மேய்த்தலை செய்தவன் என்பதே பொருள். 

மாய் - அழிதல் எனும் பொருள் உண்டு

தானியங்களின் அறிமுகத்தால் காடழித்து நாடு கண்டார்கள்.

ஒரு பக்கம் மலையில் வேட்டையாடிய சமூகம், மறுபக்கம் பெரும் மணற்பரற்பில் வாழ்ந்த கடலிலும் வேட்டையாடித்தான் வாழ்ந்து வந்தார்கள்.

வேட்டையாடி வாழ்ந்த சமுகம், விளைவிக்கத் தொடங்கியது. விளைச்சலுக்கு நிலத்தை பண்படுத்த
கால்நடைகளை பழக்கப்படுத்தி பயன்படுத்தினார்கள்.

இன்றைய மனிதசமூக பாலின பாகுபாடு, அடிநாதமே கால்நடைகளில் தோன்றியதுதான்.

வேட்டை சமூகமாய், மேய்ச்சல் சமூகமாய் இருந்தவரை பாலின பாகுபாடு விலங்குகளுக்கும் கூட அவசியமற்று போனது.

விளைச்சல் தொழிலுக்கு கால்நடைகளை பழக்கப்படுத்த, பாலின பாகுபாடுகள் தோன்றியது. பால் தேவைக்கு பயன்படும் விலங்குகளை மேய்ச்சலுக்கும், விளைச்சலுக்கு பயன்பட்ட விலங்குகளுக்கும் தான் முதல் பாலின பாகுபாடு கண்டான்.

அதன்பிறகே ஆண்மை, பெண்மை என்ற மை விகுதிகளுக்குள் மிகைப்பெற்றது. மை என்றால் மேகம். கார் என்றால் மண்.

கருமை  - கார் + மை
மண்ணுக்குரிய மேகம் என்பதே கருமை என்றாகியது.

கார்மேகம், கார்காலம், காராளன், கார்த்திகை, கார்த்திகேயன் இது எல்லாமே மழை சார்ந்த பெயர்கள் இல்லை, மண் சார்ந்த பெயர்கள்.

வேள் என்றாலும் மண் என்று பொருள்,

வேளாண்மை - வேள் +ஒண் + மை,

ஒண் - இயற்கை
புண் - துன்பம்

என்றவை தான் ஆண், பெண் என திரிந்து பெயர் பெற்றது.

மாயோன் மேய காடுறை உலகம்
சேயோன் மேய மைவரை உலகம்,

சேய் + ஒண், மாய் + ஒண்
சேயொன் என்பதே மாயோன்,சேயோன் என மருவியது.

சேயின் இயற்கை எல்லை மேகம் வரையான உலகம், மறைதல் அல்லது அழித்தலின் இயற்கை வாசனை உள்ளவரையான உலகமும் என்பதான வரிகள் அவை.

கானுறை என்பதே காடுறையாகியது.(கான் - வாசனை)

ஒண்புண் என்பது இருபாலினமும் கலந்த மூன்றாம் பாலினம். ஒண்புண் என்பது ஒண்பணாகி, இறுதியில் ஒன்பதில் போய் முடிந்தது.

புண்படுத்தி என்பதுதான் பண்படுத்தலாகியது, பண்பாடு என்ற வார்த்தையும் அங்கிருந்துதான் பிறந்தது.

வேளொண்மை(வேளாண்மை) கண்ட மருதநில தலைவனை வேந்தன் என்றார்கள்.

வேட்டையாடுதல்,நிரை மேய்த்தல், விளைவித்தல், என வாழ்ந்தவரையில் மனிதனுக்குள் எந்தவித பாகுபாடுகள் இல்லை. அதிகாரம் செலுத்தும் ஆட்சியாளர்கள் இல்லை. அதனால் கட்டுப்பாடுகளும் இல்லை.

வணிகம் பிறந்தது, வருவாய் பிறந்தது, தற்சார்பு வாழ்க்கை, பண்ட மாற்று எனும் சார்பு எல்லாம் உருமாறி பொருளாதார சார்பு வாழ்க்கைக்கு பின்தான், அதிகாரத்தை கைப்பற்ற ஆட்சியாளர்கள் உருவானார்கள்.

சமத்துவம், சகோதரத்துவம் என்றவை போய், பாகுபாடுகள் பழக்கமானது. நிலமே உச்சபட்ச அதிகாரமானது. அதனால் போர்கள் உருவானது.

ஒன்று தெரியுமா..? இன்றைய பிரதாண உணவான நெல் அரிசி என்பதே, பிறதானியங்களுக்கு ஊடுருவிய,புல் இனத்தின் கலப்பினம் தான்.

இனக்கலப்புக்கள் வீரியமான இனமாக மீண்டெழும்.
மரபணு மாற்றமே, வீரியமற்று போகும்.

யானை கட்டி போர் அடித்த இனம் என்ற பல நெல்வகைகளும், மூங்கிலின் கலப்பினம் தான்.

மலையில் வேட்டையாடி வாழ்ந்த சமூகம், ஆட்சியாளர்கள் வேட்டையை தடை செய்த பின்னும்,வெவ்வேறு தொழில்களுக்கு பழக்கமானாலும்,
இன்றுவரை பழங்குடியினமாக இன்றுவரை தொடர்கிறார்கள்.

காடுகளில், மேய்ச்சல், கிழங்கு அகழ்தல் என வாழ்ந்த நாடோடி இனங்கள், ஒரே இனக்குழுவாக இருந்தவர்களுக்குள், அதே தொழிலை தொடர்ந்தாலும் கூட, பொருளாதார நிலை இன்று சாதியம் புகுந்து பிரித்தாளுகிறது.

நிரைமேய்ச்சலை தொழிலாக கொண்டவன், நிரையை காவல்காத்தவன், தோல்பொருள் தயாரித்தவன், பனை மரத்தொழிலுக்கு பழக்கமானவன் இவை நால்வரும் ஒரே இனக்குழுக்கள்.

இன்றுவரை இந்த நான்கு இனக்குழுக்களும், எங்கு வசித்தாலும் ஒரே நிலப்பரப்பில் இணைந்திருக்கிறார்கள். சார்பு வாழ்க்கை போய்,
பொருளாதார நிலையால் உருவான சாதியத்தால் பிரிந்திருக்கிறார்கள்.

காடுகளில் நாடோடியாக வாழ்ந்தவர்களுக்கே இந்த நிலை என்றால், நிலையாக ஓரிடம் கண்ட நாடுகளில் வசிப்பவர்களிடம் எத்தனை பாகுபாடுகளை உருவாக்கியிருக்கும் இந்த பொருளாதார நிலையும், சாதியமும்....

இனக்கலப்பை பகையாக்கி, மரபணு கலப்பை ஊக்குவிக்க உருவானவையே புராணங்களும்,வேதங்களும்,கடவுளர் வழிபாடுகளும்....

முதல் பாகுபாடு விலங்குகளுக்கு என்ன அடிமை வாழ்க்கைத் தந்ததோ, அதுவேதான் பின்னர் உருவான, பாலின, சாதிய என அனைத்து பாகுபாடுகளுக்குள்ளும் அதிகாரத்தை செலுத்தி அடிமைபடுத்தியது.

சாதியத்தில் கடைசி விளிம்புநிலை என்றழைக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையும், அனைத்து சாதிகளுக்குள் இருக்கும் பெண்களின் நிலையும் ஒன்றுதான்.....

உண்மையான அடிமைத்தனத்தை உணர கல்வியும், பொருளாதார சூழலும் தன்வசமாகும் சூழலில், அடிமைத்தனத்திலிருந்து விடுபட முயல்கிறார்கள்.

பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிகாலத்தில் தான் அடிமைபட்டமோ, அதற்குமுன் மக்களாட்சியா நடந்தது. அதிகாரத்திற்காக ஆட்சி தொடங்கிய காலந்தொட்டு அடிமையாகத்தான் இருந்தோம். எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும்,மண்ணுக்கே தொடர்பற்ற சிலர் மட்டும் வேதங்களை கூறி, உயர்ந்தவர்கள் என ஏமாற்றி வாழ்ந்து வந்தார்கள். இந்த மண்ணில் கொஞ்சம் கல்வியறிவு பெற்றவர்கள் கூட, இந்த சதிசெயலை உணர்ந்து ஆட்சியாளர்களை அப்புறப்படுத்துவதைவிட, புராணக்கதை கூறி வேதங்களால் வித்தை காட்டுபவர்களை விரட்ட எண்ணினார்கள்.

அந்த எண்ணம் பரவலானதும், சுதந்திர போராட்டம் என்று திசைமாற்றிப்போனார்கள்.மத கலவரங்களை ஆட்சியாளர்களை கொண்டே நடத்திப்போனார்கள்.

வேலூர் சிப்பாய் கழகத்தின் வரலாறு சொல்லும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இங்குள்ள மத நம்பிக்கை எப்படி தெரியும்...

       ........தொடரலாம் அடுத்த பதிவில்......

                                         - சாய்.S.சுரேஷ் குமார்
                                              +91 - 8344 00 2855

Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்