Feminine
#ஆணாதிக்கம்_என்பதே_சாதியம்_கட்டமைத்ததே...
காலையில் பெண்ணியம் பேசும் கண்ணியவாதிகளா என்ற தலைப்பில் மநு பற்றி கூறியதும், பதறிபோகிறது சில பெண்ணியவாதியாக வேடம் தரித்த சாதியவாதிகளுக்கு...
ஆணாதிக்கம் என்பதே சாதியம் கட்டமைத்த கற்பனை அதே ஏற்றுக்கொண்டவர்கள் சாதியை ஏற்ற பெண்கள் தான்...
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் அவர்களுக்குள் பெரிய அளவில் ஆணாதிக்கம் இல்லை,
சாதி பாகுபாடும்,பிற சாதி ஆண்களின் ஆதிக்கம் தான் அவர்களை அச்சுறுத்தும் ஒன்று...
இடைநிலை சாதிகளில் தான், கட்டுப்பாடுகளை அதிகம் விதைக்கிறது ஆண் சமூகம்...
பெண்ணாக நம்மை அடிமைபடுத்துகிறார்கள் என உணராத வரை,ஆணாதிக்கம் தொடரத்தான் செய்யும்...எப்போது அடிமையல்ல என்ற எண்ணம் வருகிறதோ, அவள்மீது அவதூறள்ளி வீச காத்திருக்கும் சமூகம்,
சாதிய பாகுபாடும் அதே நிலை, யார் தன்னை தாழ்த்தப்பட்டவன் என ஏற்றுக்கொள்கிறானோ, அவன் கட்டுப்பாடுகளுக்குள் கட்டுப்படுகிறான்...யார் அடிமையல்ல என்கிறானோ அவனே சாதியவாதிகளின் பழிச்சொல்லுக்கும் பகைக்கும் ஆளாகிறான்..
பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் பெரிய வேறுபாடில்லை, அங்கு ஆணுக்கு கட்டுப்பட வேண்டும், இங்கு சாதிக்கு கட்டுப்பட வேண்டும்....
கட்டுக்களை உடைக்க தயாரானவன்/தயாரானவள்,விமர்சனங்களை பற்றி கவலைப்படாதவன்/கவலைபடாதவள் சுதந்திரமடைகிறான்/சுதந்திரமடைகிறாள்...
பெண் சுதந்திரம் பெண்களிடம் தான் உள்ளது... பெண் சுதந்திரம் மட்டுமல்ல, அவரவர் சுதந்திரம் அவரிடமே உள்ளது...ஒரு போதும் மற்றவர்களால் அதை தரமுடியாது...
சாதியை காரணங்காட்டி,கலப்பு திருமணத்தை எதிர்ப்பவர்கள் கூறும், பெரும்பாலான சொல்லாடல்,
சொத்துக்காக/பணத்துக்காக காதல் என்ற பெயரில் பெண்ணை ஏமாற்றுகிறான், நாடக காதல்..என்றுதான்...
குறிப்பிட்ட சமூகத்தில் மட்டுமல்ல,எல்லா சமூகங்களிலும் நாடக காதல்கள் நிகழ்கிறது..
அங்கு பெண் ஏமாறுகிறாள், அவள் உணர்வுகள் ஏமாற்றமடைகிறது, ஏன் அவள் உடலை ஒப்படைக்கிறாள்,வாழ்வே ஏமாற்றமடைகிறது.... ஆனால் இது எதுவும் நாடகக்காதல் எதிர்ப்புக்கு பிரதாணமாவதில்லை...
சொத்தும், பணமுமே பிரதாணமாகிறதென்றால், பெண்களை சமூகம் கொண்டாடுகிறதா...? கொண்டாடுவதாக ஏமாற்றுகிறதா...?
தற்கொலையா, கொலையா தெரியாத இளவரசன், கொல்லப்பட்ட சங்கர், இவர்கள் நாடக காதலர்களாவது சாதியால் மட்டுமே...
காதலன் மரணத்திற்கு பிறகு பெற்றோரை எதிர்த்த கௌசல்யா, அவள் நிலை உணர்ந்து துணையான ஒவ்வொரு ஆண்களோடும் விமர்சிக்கப்படுகிறாள்...
நடிகை வனிதா விஜயகுமார், தன் உணர்வுகளுக்கு துணை வராத, வாழ்க்கைத் துணைகளை விடுத்து, தன் முடிவை தானே எடுக்கும் சுதந்திரம் பெறுகிறாள்...அவரும் விமர்சிக்கப்படுகிறார்.
வனிதா,கௌசல்யா எடுத்த முடிவை ஒரு ஆண் எடுத்தால்,சமூகம் இத்தனை விமர்சிக்குமா...?
வனிதா,கௌசல்யாவின் சாதி காணாமல் போகிறது.. சுதந்திரம் பெறுகிறாள்...
சுதந்திரமான பெண்,சமூகத்தால் விமர்சிக்கப்படுகிறாள்...
பெண்ணுக்கும்,சமுகவிடுதலைக்கும் நெருங்கிய தொடர்புண்டு...சமுதாய விடுதலை என்பது பெண் விடுதலையில்லாமல் சாத்தியமில்லை என்கிறார் லெனின்...
பெண் விடுதலைதான்,அவள் முடிவுகளே அவளே எடுக்கும் சூழல் வந்தால், வாழ்க்கைத்துணை வரை அத்தனையும் அவள் தேர்வானால், சாதியம் பேசும் நாடக காதல் என்ற வார்த்தையற்று போகும், சமூக விடுதலையாகும்...
மண்ணும் பொண்ணும் எங்களுக்கு ஒன்று தான், என்று சாதியம் சொல்லும். இரண்டையும் மதிப்பை பொறுத்து காத்திருக்கும், அதிகமான விலை தந்தால் விவசாய பூமி, வீட்டுமனையாகும்... விலையில்லா நிலம் நாளடைவில் தரிசாகும்...
அதுபோலவே பெண்ணும்,பணம் உள்ளவன் பெற்றுச்சென்று பாடாய்படுத்தினாலும் ஒத்துழைக்க சொல்லும் அல்லது கைகழுவி செல்லும்... எவனும் பெற முயற்சிக்காத வசதியற்றவன் வீட்டுப்பெண் முதிர்கன்னியாவாள்.
ஏதோ பேச வேண்டும், அறிவாளியாக நிருபிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படுகிறதேயொழிய, ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை என்பது தெளிவாகிறது...
பெரியாரை,அம்பேத்கரை புகைபடத்தில் வைப்பது பெரிதன்று, எண்ணத்திலே வையுங்கள் சிந்தை தெளியும்...
ஒரு பெண் சாலையில் நடமாடும் போது,எத்தனை ஆண்கள் அவளை கண்களாலே பலாத்காரம் செய்கிறார்கள் என்பது சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை.
ஒரு நாய் எப்படி மோப்பம் பிடிக்கிறதோ அதே போல ஒரு பெண் சாலையில் செல்லும் போது உற்றுப்பார்ப்பதும் மோப்பமே. குறிப்பாக சொல்லவேண்டுமானால் நாயைவிட கேவலமான மோப்பமே. இதைத் தான் ஆங்கிலத்தில் Male Gaze என்பர்.
ஒரு ஆணை உற்றுப்பார்ப்பதற்கு கூட பெண்ணுக்கு தான் கட்டுப்பாடு...
பார்வை தொடங்கி பாலியல் பலாத்காரம் வரை, பலகீனமானவள் என்று பயமுறுத்திய சமுகத்தின் கட்டுப்பாடுகளே,ஆணாதிக்க மனநிலைக்கு காரணம்...
இன்று பெண்களுக்கு எவையெல்லாம் பிடித்தவையாக இருக்கின்றதோ, அவையெல்லாம் உண்மையிலேயே ‘
"ஆண்களுக்கு பிடித்ததாகவே", "ஆண்களை கவர்வதற்காகவே "’ என்று சொல்லப்பட்டவையாகவே இருக்கின்றது.
பெண்ணின் ஒவ்வொரு உறுப்பும் இன்று ஊடகங்களில் விலை பேசப்படுகின்றன. ஆண்களுக்கான ஜட்டி விளம்பரத்திலும் கூட ஊறுகாய் போன்று தொட்டுக்கொள்வதற்கு கவர்ச்சிக்காக பெண்கள் தேவைபடுகிறார்கள்...
புலியை முறத்தால் துறத்தினாள், பாண்டிய மன்னனையே எதிர்த்து நின்ற கண்ணகி, படை நடத்தி போர்புரிந்த வேலுநாச்சியார், துணை நின்ற குயிலி, இவர்களை சாதியவாதிகளே இன அடையாளமாக்கி,
பதிவிரதை,கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், என புராதண கதை சொல்லி பெண்ணடிமைக்கு நங்கூரம் விதைத்தார்கள், நகரவே முடியாமல் நிற்கிறது பெண் எனும் பெருங்கப்பல்...
ஆணுக்கே குறையிருந்தாலும் பெண்ணையே மலடி என்று சாடும் சமூகமல்லவா இது...! ஆண்களை குறைகூறி பார்த்ததுண்டா...?
ஆண் என்ன அதி அற்புத பிறவியா...?
- சாய்.S.சுரேஷ் குமார்
+91 - 8344 00 2855
Comments
Post a Comment