இளங்கோவடிகள்

 #சிலப்பதிகாரமும்_கண்ணகியும் 


#ஒரு_ஆய்வியல் 


#தொடர்ச்சி...


காவிய நாயகர்களையும், புராண நாயகர்களையும்,காப்பிய நாயகர்களையும் கொண்டாடியே, இன்று திரைப்பட நாயகர்களை கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோம்.... 


எகிப்திய இசிஸ்(Isis) நம்பிக்கை, நாவாய் வணிகம் செய்த சேரள நாய்கன்கள் மூலம் பரவி, சாத்து வணிகம் செய்த சாத்துவன்கள் மூலம் வளர்ந்து, 


ஒரு சாத்துவணிகனும், ஒரு சேர அரச வாழ்வை துறந்த துறவியும் இணைந்து, புணைவுகளால் கண்ணகி என்றார்கள்...


நமது கொண்டாட்ட மனநிலை, சில அடிப்படை கேள்விகளை கூட கேட்க தவறவிட்டதால், ஒரு காப்பியம், வரலாறாகி போகின்றது.


சில கேள்விகள்,

 

கண்ணகி - மாதவி - கோவலன் - மாநாய்கன் - மாசாத்துவன் என அத்தனையும் தெரிந்த,

சீத்தலை சாத்தனார் ஏன் சிலப்பதிகாரத்தை இயற்றாமல், மணிமேகலை இயற்றினார்...?


புகார், மதுரை, வஞ்சி என சோழ,பாண்டிய, சேர தொடர்பை வகைப்படுத்தி இளங்கோவடிகளுக்கு கூறிய மதுரை கூல வாணிகர் சாத்தனார்., ஏன் மணிமேகலையில் பாண்டிய நாட்டை தவிர்க்கிறார்...?


மாதவியின் அரங்கேற்று காதை தொடங்கி, பாண்டிய நாட்டுக்கே வராத மாதவியின் அத்தனை நிகழ்வுகளையும், சிலப்பதிகாரம் விவரிக்கிறதே, அதையும் சாத்தனாருக்கு கண்ணகிதான் கூறினாளா...? அல்லது மாதவி கூறினாளா...? 


வஞ்சி காண்டம் கூறிய படி, மதுரையை எரித்த பின், திருசெங்குன்றம் வந்த கண்ணகி 14 நாட்களுக்கு பின் விண்ணுலகம் அழைத்து செல்லப்பட்டதும், அதை அங்குள்ள மலைவாழ்மக்களும் கண்டது உண்மையெனில், 

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை எங்கு அமைத்திருப்பான்...? திருசெங்குன்றம் எனும் செங்கனூரில் தான் அமைத்திருப்பான்.  பளியங்குடியில் அமைக்க வேண்டிய அவசியமென்ன...?


சிலப்பதிகாரத்தில் 


இரு பெரும் குரவரும் ஒரு பெருநாளால்

மண அணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி

யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ

மா நகர்க்கு ஈந்தார் மணம்

அவ்வழி 

முரசு இயம்பின முருகு அதிர்ந்தன

முறை எழுந்தன பணிலம் வெண்குடை

அரசு எழுந்ததொர்படி எழுந்தன

அகலுள் #மங்கல_அணி எழுந்தது

மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து 

நீல விதானத்து நித்தில பூம் பந்தர் கீழ்

வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்து

சாலி ஒரு மீன் தகையாளை கோவலன்

மா முது #பார்ப்பான்_மறை_வழி_காட்டிட

#தீ_வலம்_செய்வது_காண்பார் கண் நோன்பு என்னை 

விரையினர் மலரினர் விளங்கு மேனியர்

உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்

சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்

ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர்

விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை 

முளை குட நிரையினர் முகிழ்த்த மூரலர்

போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார்

காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல்

தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி

அம் கண் உலகின் #அருந்ததி அன்னாளை 

மங்கல நல் அமளி ஏற்றினார் தங்கிய

இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை

உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும்

செரு மிகு சின வேல் #செம்பியன்...


இவைகளில் வரும் மங்கல அணி, பார்ப்பான் மறை வழி காட்டிட, தீ வலம் செய்வது, அருந்ததி என்பன போன்றவை சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றதா...? அல்லது பின்னர் திருத்தப்பட்டதா...?


பாண்டைய தமிழர் திருமணமுறையில் மங்கல அணி (தாலி) அணிந்த பழக்கம் இல்லை. 


பிராமணர்கள் வேதம் ஓதிய சடங்குகள் தமிழர் திருமண முறையில் இல்லை.


அக்னியை வலம் வருவதும் கிடையாது.


கண்ணகியை பார்ப்பனிய புராணங்கள் காட்டும் வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததியுடன் ஒப்பிட வேண்டிய அவசியம் யாது...? 


செம்பியனை வாழ்த்துவதாக மங்கல வாழ்த்துப்பா நிறைவடைகிறது. 


சிலப்பதிகாரம் காட்டும் சேர மன்னன் - செங்குட்டுவன், சோழ மன்னன் - செம்பியன், பாண்டிய மன்னன் - ஆரிய படைகடந்த நெடுஞ்செழியன்.


இதில் செம்பியனை பற்றி தேடி பார்த்தால் பெரிய குறிப்புகள் எதுவும் இல்லை, சோழர்களின் முன்னோராக கருதப்படுகிறான், இந்திர விழாவை ஆரம்பித்தவன் என்ற குறிப்புகளை தவிர எதுவும் இல்லை. 


அதேவேளையில் சேரன் செங்குட்டுவனுக்கு தகப்பனான இமயவரம்பன் சேரலாதன், மேலும் மதுரைகாண்டம் கூறும், ஆரிய படைகடந்த நெடுஞ்செழியன் காலத்தை கருதுங்கால், அப்போதைய சோழ அரசன் பெருங்கிள்ளி ஆவான்... 


இவனை பற்றிய குறிப்புகளில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி (இராசசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி,) என குறிப்பிடப்படுகிறான். 


செம்பியன் பற்றிய குறிப்புகளும் இவனது பெயரிலும் இல்லை.


சிலப்பதிகாரம் பற்றிய கூற்றில், புகார் காண்டம் முழுக்க, சோழ நாட்டின் வளம் குறிப்பிடப்படுகிறது. சோழ மன்னர்களை புகழ்ந்தும் கூறுகிறது. செம்பியன் பற்றிய ஒரு குறிப்பில், சிபி சக்ரவர்த்தியின் கதையை போல் என்ற குறிப்பு உள்ளது.


பாண்டிய மன்னனை நீதி தவறியவனாக காட்சி படுத்துகிறது. சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த இவன் அம்மன்னனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களை அடக்கி ஆண்டவனுமாவான். இவன் தான் இயற்றிய புறநானூற்று பாடலில், 


உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!


பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்


சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்


ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்


முத்தோன் வருக என்னாது அவருள்


அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்


வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்


கீழ்ப்பால் ஒருவன் கற்பின்


மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே.


கல்வியின் சிறப்பை கூறுகிறான்... அப்படிப்பட்ட ஒருவன் தீர விசாரிக்காமல் தண்டனை வழங்கினான் என்பது உண்மையாயிருக்குமா...?


வடவாரிய படை கடந்து

தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்

அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்

நெடுஞ்செழியன்....

என்கிறார் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில், 


ஒரு சேர இளவரசன், ஒரு பாண்டிய மன்னனை இப்படி புகழுவானா...?


அறம் தவறி தவறான நீதி வழங்கியதற்காக பாண்டியன் உயிர் துறந்திருக்கிறான், தான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் அவன் மனைவி கோப்பெரும்தேவியும் உயிரிழக்கிறாள்....


அதன்பிறகு எதற்காக கண்ணகி மதுரையை எரிக்க வேண்டும்...? 


ஆனாலும், கண்ணகி கற்பால் மதுரையை எரித்தாள் என்ற எண்ணத்தை ஆழ பதிக்க, அது உருவகிக்கப்படுகிறது.


தாலி, சிலம்பு, கற்பு இதை சுற்றி பல கேள்விகள் தொடர, 


பண்டைய தமிழர் மணமுறை பற்றிய ஏதேனும் குறிப்புகள் உள்ளதா...? அதில் தாலி எனும் மங்கல நாண், மங்கல அணி இருந்ததா என கேள்விகள் பிறந்தது...


https://iniyavaikatral.in என்ற இணையதளத்தில் பழந்தமிழர் திருமணமுறை என்ற பக்கத்தில் பல தகவல்கள் இருந்தது.


ஆனால் தாலி பற்றிய குறிப்பில் புதுநாண் என குறுந்தொகை(67:3) குறிப்பதாக கூறியிருந்தது. குறுந்தொகை (386:3)ல் வாலிழை மகளிர் என தாலி அணிந்த பெண்களையும் குறிப்பதாக கூறியிருந்தது.


ஒருவன் கொஞ்சம் அறிவிருந்தால், எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் கூடவே வரும் போல,


இந்த வலைதளங்களை போல பலரும் தனக்கு தோன்றியவற்றை வைத்து கதை எழுதி கொள்கிறார்கள்.


கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவன் நான்.  


அள்ளூர் நன்முல்லையார் பாலை திணைப்பற்றி எழுதிய பாடலில்,


தலைவனுடைய பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி, தோழியை நோக்கி, “ பிரிந்து சென்ற தலைவர் நம்மை நினைப்பாரோ? அவருக்கு நம்மைப் பற்றிய  நினைவு இருந்தால், இந்நேரம் திரும்பி வந்திருப்பாரே!” என்று பிரிவைப்பற்றி எழுதிய பாடல்


உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்

பொலங்கல ஒருகா சேய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. 


தோழி, கிளி தன்வளைந்த அலகினிடத்திலே கொண்ட ஓளி பொருந்திய  வேப்பம்பழமானது,

புதிய பொற்கம்பியை உள்ளே செலுத்தும் பொற்கொல்லனுடைய, கூரிய கைந்நகத்திற் கொண்ட  பொன்மாலைக்கான ஒரு காசுபோல் உள்ளது.அத்தகைய வேப்பமரம் உள்ள, வெய்யிலால் சுட்டெரிக்கப்பட்ட கருமையான, கள்ளிச்செடிகளையுடைய பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவர், என்னை நினைக்க மாட்டாரோ?


இதுதான் இந்த பாடலின் பொருள். பொன்மாலை செய்ய தேவையான புதுநாணை, தாலியாக கற்பனை ஓடவிட்டிருக்கிறார் வலைதளத்தை நிர்வகிப்பவர்....


என்ன கம்பி கட்டுற கதையா இருக்கு...? என கேட்க தோணுகிறது.


அடுத்து வெள்ளிவீதியார், நெய்தல் திணை குறித்த பாடலில், தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால், தலைவி வருந்துகிறாள். “முன்பெல்லாம் நீ மாலைக்காலத்தில் இவ்வாறு வருந்தாமல் மகிழ்ச்சியோடு இருந்தாயே! இப்பொழுது என்ன ஆயிற்று?  தலைவன் விரைவில் வந்துவிடுவான். நீ இவ்வாறு வருந்துவது சரியன்று” என்று தோழி கூறுகிறாள். தோழியின் கூற்றுக்கு  மறுமொழியாகத் தலைவி, “மாலைக்காலம் இத்துணைத் துன்பத்தையும் தனிமையையும் தரும் என்பதைத் தலைவன் பிரிவதற்குமுன் நான் அறிந்திலேன். ” என்று கூறுகிறாள்.


வெண்மணல் விரிந்த வீததை கானல்

தண்ணந் துறைவன் தணவா ஊங்கே

வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும்

மாலையோ அறிவேன் மன்னே மாலை

நிலம்பரந் தன்ன புன்கணொடு

புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே.


தோழி! வெண்மையான மணல் பரவிய, மலர்கள் செறிந்த சோலையையுடைய,  குளிர்ந்த கடற்றுறையையுடைய தலைவன்,  என்னைப் பிரிவதற்கு முன்பு, 


நான், தூய அணிகலன்களை அணிந்த மகளிர், விழாவுக்குரிய அலங்காரங்களைச்  செய்துகொள்கின்றது போல் அலங்கரித்த மாலைக்காலத்தையே அறிந்திருந்தேன். இப்பொழுது, அது கழிந்தது! 


அம்மாலைக் காலம், நிலவுலகம் முழுதும் பரவியது போன்ற பெரியதுன்பத்தோடு, வருத்தத்தைத் தரும் தனிமையை உடையது என்பதை நான் அப்பொழுது அறியேன்.


அணிகலன்கள் என்பதே வாலிழை... அதை தாலி என உருவகம் செய்வதும் பெரிய கயமைத்தனம். 


தாய்வழி சமூகங்கள் அழிந்து ஆணாதிக்கம் எனும் பாலின பாகுபாட்டின் தொடக்கமே முதல் தாலி, தாளிப்பனையில் உருவான, பெண் தன் உணர்வுகளையும்,உணர்ச்சிகளையும், அடக்கம் செய்யும்,தாழியாகும்.


அது மங்கல நாணாகி, பனையிலிருந்து விரலி மஞ்சளுக்கு மாறி, பொன் அணியாக மாறவே பல காலமானது


இப்படி ஆளுக்கொரு கதை சொல்லித்தான், கண்ணகி கதை உருவானது... சிலப்பதிகாரம் பிறந்தது.


............தொடரலாம் மற்றொரு பதிவில்.....


                                       - சாய்.S.சுரேஷ் குமார்

                                             +91 - 8344 00 2855

Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்