நினைவுகள் தொடர்கதை
#பயணங்கள்_முடிவதில்லை...(II)
#நினைவுகள்_தொடர்கதை...
கண்ணீர் துளிகளின் ஈரம் காய்வதற்குள், யேசுதாஸ் ஷைலஜாவும் நினைவுகளை சுகமாக மீட்ட தொடங்குகின்றனர்,
ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே.. என
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்
சேரும் நாள் வேண்டும்,,,,
இந்த வரிகளில் தான்...
பெண்மையின் தேவை என்ன...?
இந்த உலகில் இந்த கேள்விக்கு
பெண்களால் கூட விடைதர முடியாது...
புடவையா, நகையா,பணமா,ஆடம்பரமா உணவா, அன்பா, இதில் எதிலுமே அவள் நிறைவு கொள்வதில்லை...
இது எதுவுமே அவள் தேவையாக இருந்ததேயில்லை... அன்பையும் சேர்த்தே கூறுகிறேன்...இந்த உலகில் பெண்கள் வெளிபடுத்தும் அன்பைவிட ஆண்கள் அன்புகாட்டுவதில் கூட குறைவுதான்...
அவள் தேவை என்ன...? பெண்மையை உணர்வதே அவள் தேவை... முந்தைய பதிவில்,ஒரு ஆண் தன்னிடமும் பெண்மையின் அத்தனை இயல்புகளையும் தாய்மை வரை உணர்ந்த பிறகே முழுமையடைகிறான் என கூறியிருந்தேன்...
அந்த பெண்மையை உணர்வதே அவள் விரும்பும் துணைக்கு தேவையான ஒன்று... அந்த தேவைகள் தீராத நேரத்தில் தீர்க்கின்ற துணை வேண்டும் என்கிறாள்...! அப்படிப்பட்ட துணையுடன் இணையும் நாளை எதிர்பார்க்கிறாள்...!
ஒரு பாடல், இத்தனை பாடங்களை கற்றுதருமா...? கற்றுத்தந்துவிட்டு சென்றவளின் நினைவுகளால் தான் பயணங்களில்,பாடல்களில் தூக்கம் தொலைக்கிறேன்...
கண்ணீர் வரத்து குறைய தொடங்கியது...
நினைவுகள் எனும் ஆழ்கடல் கண்ணீர் வற்றினால்
வறண்டா போகும்...?
என கண்ணீர் தடங்களாகி கொண்டிருக்கும் போதே,ஜானகி,பாலசுப்பிரமணியன் குரல்களில்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
என வினவுகிறது...?
பாதை தேடியே,
பாதம் போகுமோ
காதலென்ன நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ
காதலின் கால்கள்,
ஏற்கனவே பயணப்பட்ட
பாதைகள் தெரிந்தாலும்
அதற்குள் பயணிப்பதில்லை...
அது தனக்கென தனிவழியை
ஏற்படுத்தியே பயணிக்கும்...
வெறும் நேசம் மட்டும் காதலில்லை...
நிஜங்களைப்போல் கனவுகளில் ஒருபோதும் கூச்சம்கொள்வதில்லை,
தனிமையில் மட்டுமல்ல, கூட்டத்திலும் நினைவுகளோடு பேசிக்கொண்டு தானிருக்கும்...!
இந்த முரண்கள் காதலில்(காதலால்) மட்டுமே சாத்தியம்...!
அத்தனை முரண்களையும் அழகாக வெளிப்படுத்தும் ஒரு பாடல் இது...
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி...
குளித்ததால், நீர் கொதிக்குமா..?
என முரண்களை ரசித்தபடி நினைவுகளை அள்ளிபருகி கொண்டிருக்கும் போதே...
யேசுதாஸ்,சித்ராவும்....
கண்ணா வருவாயா,மீரா கேட்கிறாள் என கண்ணனின் ஆளிங்கணத்தை பாடுகிறார்கள்...
நீலவானும்,நிலவும்,நீரும் மட்டுமல்ல மீராவுக்கு, உண்பதிலும் உறங்குவதிலும் கூட கண்ணனின் நினைவுகளால் வாடுகிறாள்...
மீராவின் ஏக்கவும், கற்பனை ஆளிங்கனம் கூறும் பாடல்...
என கடந்து திரும்பும் முன்,
சுசீலா அம்மாவும், கங்கை அமரனும், சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே என சோகத்தை சொல்லி கொண்டிருக்க...
திருக்குறளின் காமத்துப்பால்
(1150)
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்...
எனும் ஊரார் பேசுவதையும்
பிரிவாற்றாமை எனும் 116 வது அதிகாரத்தின் மொத்தக்குறளையும் வெளிப்படுத்தும் பாடல்..
காதலோடு தான் வாழ்ந்திருக்கிறான் வள்ளுவனும்.... என நினைத்துக்கொண்டிருக்கையில்
சுசீலா அம்மா மறுபடியும், கானலுக்குள் மீன்பிடித்தேன்
காகிதப்பூ தேன் எடுத்தேன்.....
என எதிர்பார்ப்புகள் பொய்த்து போன பெண்மையின் வலிகளை பாடிகொண்டிருந்தார்...
தீபம் இங்கே கோவில் இங்கே
தெய்வம் எங்கே காதல் நெஞ்சே
சோகம் வெள்ளம் ஆகும் உள்ளம்
சொந்தம் ஒன்று தேடும்...
தீபமாய்,கோவிலாய் பெண்மையின் காத்திருப்பையும், தெய்வத்திற்கு நிகரான காதலனை உருவகித்தவளுக்கு, அவனது ஏமாற்றமும்...
எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யாத, காதல் மேல் கோபமும் வெளிப்படுகிறது...
சோகங்களை தவிர எந்த சொந்தமும்
இல்லாத சூழலை வெளிப்படுத்துகிறாள்...
நிறைய எதிர்பார்ப்புகளோடு தான் காதல் தொடங்குகிறது...
எதிர்பார்ப்புகளை சமரசம்
செய்வதில் தான் காதல் தோற்றுப்போகிறது...
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாவிட்டாலும்....
முயற்சித்து கொண்டிருப்பதே காதலை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒன்று....
சாதி - காதலுக்கெதிரானது
மதம் - காதலுக்கெதிரானது
சமூகம் - காதலுக்கெதிரானது....
ஆனாலும் ஒரு காதல் படங்களும்,பாடல்களும், கவிதைகளும்,கதைகளும்,
புராணங்களும், ரசிக்கப்படாமல் போனதில்லை...!
சாதி,மதம்,சமூகத்தை தாண்டி மனிதம் காதலை கொண்டாடுகிறது... ஆனால்,தான் விமர்சனம் செய்யும் இடத்தில் இருக்கவேண்டும்...
விமர்சனத்தை எதிர்கொள்ளும் இடத்தில் இருக்கக்கூடாது என்ற எண்ணமே எதிர்ப்பிற்கான காரணம்...!
ஒரே சாதிக்குள் காதல் வந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளுமா..?
அங்கு பொருளாதாரம் பிரச்சணையாகி நிற்கும்...!
ராதையை போல்
உருகி உருகி காதலித்தாலும், ஆயர்பாடியில் இருந்தால்
ராதையே துணையாகியிருப்பாள்...
மதுரா போய் மணிமுடி தரித்தபின்
ராதை நினைவே வந்திருக்காது ...
ராதைகள் மட்டுமல்ல, கர்ணன்களின் வாழ்க்கையிலும் காதலின் தடம் மட்டுமே தெரிகிறது..மனம் தீர்மானிக்க வேண்டிய காதல்,பணம் தீர்மானித்து தோற்றுப்போகிறது....
என நினைவின் பயணத்தில் இளைப்பாற்ற ஜானகி,பாலசுப்பிரமணியன் குரல்களில்
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க் கோலம்
என என் நிலை உணர்ந்துதான் பாடல்வந்ததோ தெரியாது,
நானே உன் சுமையாக
ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்....
ஒரு இணை,
தன் சுமைகளை
இறக்கிவைக்க,
ஒரு சுமைதாங்கி
தேடும் படலத்தில்...
அதன் உணர்வுகளை உணரும்,
துணை கிடைத்தால்,
சுமைகளால் சோர்ந்து போன உணர்வற்ற உடல்
துணையின் தோளில் இளைப்பாறி...
தன் பாரங்களை இறக்கிவைத்தபின்
வழியும் விழிநீர் சுகமானதாக மாறும்...
எங்கு வரும் ஆனந்தம்,என ஏங்கிய அந்த இணைக்கு சுகமான விழநீர் தரும் துணை
உடன் வரும் நிழலாகவே அமைந்தால்... அதுவே அந்த இணையின் பேரின்பம்...
என பாடல் முடியும் போது, இதற்குமேல் என் கண்ணீர் தடங்கள் காட்டிக்கொடுத்துவிடும் மற்றவர்க்கு, என பயணத்தை இடைநிறுத்தி முகம் கழுவிக்கொள்கிறேன்...என் கண்ணீரின் தடமழிக்க...காதலின் தடங்களோடு தொடலாம்....
- சாய்.S.சுரேஷ் குமார்
+91 - 8344 00 2855
Comments
Post a Comment