சிதையாத சிற்பங்கள்

 #பயணங்கள்_முடிவதில்லை....(IV)


#சிதையாத_சிற்பங்கள்....


உயிர்வலியை உணர்ந்து திரும்பும் முன்...


ஜானகி அம்மாவின் குரல், சின்ன சின்ன வண்ணக்குயில், என கொஞ்சி கூவும் வரிகள்...


மேனிக்குள் காற்று வந்து 

மெல்லத்தான் ஆட கண்டேன்,

மங்கைக்குள் காதல் வெள்ளம்

கங்கைப்போல் ஓட கண்டேன்...

இன்பத்தின் எல்லையோ இல்லையே

அந்தியும் வந்ததால் தொல்லையே...


இந்த காதல் எத்தனை விசித்திரமானது, 

தினம் தேகம் தழுவும் 

தென்றலின் தீண்டல்கூட, 

புதிதாக உணர செய்யும்...

பகல் பொழுதில் நினைவுகளோடும்,

இரவானால் கனவுகளோடும், பயணப்படும் காதலுக்கு,

இரண்டிற்கும் இடைப்பட்ட அந்தி தொல்லை தருகிறதாம்...!


எத்தனை முரண்களை 

இந்த காதல் கொண்டிருக்கிறது...!

என எண்ணும் போதே...


பாலசுப்பிரமணியன் ஆஹா ஆஹா என ஆரம்பித்து, 


காதலின் தீபமொன்று ஏற்றினாளே,

என நெஞ்சில் ஏற்றிய தீபத்தின் ஒளியை உருவகிக்கிறார்....


என்னை நான் தேடித் தேடி

உன்னிடம் கண்டு கொண்டேன்


பொன்னிலே 

பூவை அள்ளும் 

புன்னகை மின்னுதே 

கண்ணிலே 

காந்தம் வைத்த 

கவிதையைப் பாடுதே

அன்பே இன்பம் சொல்ல வா....


முழுமையடையாத மனிதம், 

தன்னை அறிந்து,

தன்னை தேடும் நிகழ்வே காதல்...!

ஒவ்வொரு காதலும் 

தன் துணையை தேடுவதில்லை...

தன் இணையை(மற்றொரு பாதியை) தேடுகிறது...


ஆனால் தேடி தன்னை, 

தன் இணையிடம் கண்டாலும்...

தன்னில் மற்றொரு பாதி

அந்த இணைக்காணது

என இருவரும் முழுமை 

பெற்றால் மட்டுமே

காதல் காலபரியந்தம் நீடீக்கிறது...


பொன்னைவிட மின்னுவது தன் இணையின் புன்னகையே...

தன்னை இணையாக்க தேவையான 

காந்த சக்தி இணையின் கண்களில் உள்ளதையும் உணர்ந்தவர்களால் காதலை தக்கவைக்க முடியும்...


கண்களின் ஈர்ப்புவிசை 

குறையாத வரை 

காதல் வாழ்ந்திருக்கும்...

ஈர்ப்பை தக்கவைக்க

எதிர் எதிர் துருவங்களாகவே பயணப்பட வேண்டும்...


கூடலை விட ஊடலே இன்பம் தரும்...

வள்ளுவனே,


ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்....


என்றுதான் நிறைவு செய்கிறான் உலகப்பொதுமறையை...


என ஊடலை எண்ணி முடிக்கும் முன்..


சித்ரா அம்மா, Yes I love this idiot.... I love this lovable idiot என்கிறார்...


பாலசுப்பிரமணியனோ, காதல் கவிதைகள் படித்திடும் நேரம் என தொடங்குகிறார்....


கைவீசிடும் தென்றல் 

கண் மூடிடும் மின்னல்

இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ


பண் பாடிடும் சந்தம் 

உன் நாவினில் சிந்தும்

அது மழையோ புனலோ நதியோ கலையழகோ


மேகமொன்று நேரில் இங்கு 

வாழ்த்த வந்ததடி

தாகம் கொண்ட பூமி 

நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி


இது தொடரும் 

மலரும் வளரும்

இனிக் கனவும் நினைவும் உனையே


தொடர்ந்திடும்


பூ மாலைகள் கொஞ்சும் 

பா மாலைகள் கெஞ்சும்

உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை


தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை

எனை ஒருநாள் பலநாள் தொடர்ந்தால் அது புதுமை


கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா

காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ


இனி வருவாய் தருவாய் மலர்வாய்

எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய்.....


என ஊடி, கூடி களித்திருக்கும் காதலர்களை கூறும் பாடல்....


கைவீசும் தென்றலாய்,கண் மூடிடும் மின்னலாய்,கனியாய்,கவியாய்,அமுதாய்,சிலையாய் காதலியை உருவகிக்க....


காதலியோ பாட்டின் சந்தமாய்,மழையாய்,நீராய்,நதியாய்,கலையாய் உருவகிக்கிறாள்...


நான் பாடும் பாடல்களை வாழ்த்த மேகமாய் வந்த உன்னை, தாகம் கொண்ட பூமியாய் சேர்த்து கொள்கிறேன்... என்கிறான்


அவள் இனி இது தொடரும், உன்னை வாழ்த்த, உன்னை ஊக்குவிக்க, உன்னையே கனவிலும் நினைவிலும் தொடர்வேன் என்கிறாள்...


எப்பேற்பட்ட உந்துசக்தி என உணர்ந்தவர்களுக்கே தெரியும்... 


வாழ்த்துக்களும்,புகழும் கொண்ட 

உன்னை பூமாலைகள் கொஞ்சும், 

உன் புகழை எழுத பாமாலைகள் கெஞ்சும், உனை மனதால் நினைப்பது கூட இனிமைதரும்... என புகழுரைக்கிறாள்...


உனை ஒருநாள் மட்டுமல்ல 

பலநாள் தொடர்ந்தாலும் புதுமையாய் தெரிகிறாயே என சொல்கிறான்....


எப்போது தன் இணை 

தினம் தினம் 

புதுமையாய் தெரிகிறாளோ 

அங்கே காதல் நீளும்... வாழும்... 


என் எதிர்பார்ப்புக்களை இறைவனிடம் மட்டுமே கூறியிருந்தேன்... உன் காதல் என் எதிர்பார்ப்புகளாகவே காட்சிதருகிறது... இனி அந்த காதல் எனக்கானது, வந்து,தந்து, என் உயிரின் சரிபாதியாய், உறவாய் தொடர்வாய் என கூறி,

காதலை முன்மொழிந்த காதலனுக்கு, 

வழிமொழிந்து,

காதல் தீர்மானம் நிறைவேற்றுகிறாள் காதலி...!


என ரசித்து கொண்டிருக்கும் போதே,  யேசுதாஸூம் உமா ரமணனும், 

நீ பாதி, நான் பாதி கண்ணே

என தொடங்க...


இடது விழியில் தூசி விழுந்தால்

வலது விழியும் கலங்கி விடுமே


இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்

இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்


சொர்க்கம் எதற்கு 

என் பொன்னுலகம்

பெண்ணுருவில் 

பக்கம் இருக்கு கண்ணே வா


இந்த மனம்தான் என் மன்னவனும்

வந்து உலவும் நந்தவனம் தான் அன்பே வா


சுமையானது ஒரு சுகமானது

சுவை நீ தான்....


தன்னை உணர்ந்து, இணையை சேயாக்கி,தன் தாய்மையை உணர செய்யும்,பாரங்களை பரஸ்பர இடமாற்றும் சுமைதாங்கியாய் அமைந்த இணைகள் வாழ்க்கையின் வரம்...


இருட்டில் கூட விலகாத நிழலாய் அவர்கள் பயணம் இருக்கும்,சொர்க்கத்தை விட சிறந்ததாய் அவர்கள் வாழ்க்கை அமையும்,


என லயித்திருக்கும் போதே...,


மறுபடியும் அதே உமா ரமணனும்,யேசுதாஸூம்


கண்ணனே நீ வர காத்திருந்தேன்...என உயிர்வரை நுழைய,,,,


ஆசைதீர பேச வேண்டும் வரவா...

நாலுபேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா...


சமூகம்,சாதி,மதம், பாலினம் என நான்கு பேருக்கு தெரியாமல், மனிதமாய் இணைகள் பேசும் சூழல்வந்தால் வந்தால் மட்டும் ஆதிக்கம் மறைந்து காதல் தளிர்க்கும்...


காதலிக்கும் போது ஆதிக்கம் செலுத்துவதில்லை... காதலிக்கப்பட்டு இணைந்த பிறகே ஆதிக்கமாவதற்கு மேற்கூறிய நான்கு காரணிகளே காரணமாகின்றன...! 


அவைகளை தவிர்த்து காதலின் ஆதிக்கம் தொடர்ந்தால் வாழ்வு சிறக்கும்... 


என்ற நினைவின் தொடர்ச்சி நீள்கையில், 


மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ....என பாலசுப்பிரமணியன் கேள்வி எழுப்ப தொடங்குகிறது கனவின் நீட்சி...


வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி

சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்

சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்

கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்

கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்

அதிசய சுகம் தரும் அனங்கிவல் பிறப்பிது தான்...


முத்துமணி ரத்தினங்களும் 

கட்டிய பவழமும்

கொத்துமலர் அற்புதங்களும் 

குவிந்த அதரமும்

சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்

சுற்றிவரச் செய்யும் விழியும் 

சுந்தர மொழிகளும்

எண்ணிவிட மறந்தால் 

எதற்கோ பிறவி

இத்தனையும் இழந்தால் 

அவன் தான் துறவி

முடி முதல் அடிவரை 

முழுவதும் சுகம் தரும்

விருந்துகள் படைத்திடும் 

அரங்கமும் அவளல்லவா...


இந்த பாடலில் நான் முற்றிலும் முரண்படுகிறேன்... 

தன் இணையின் உணர்வுகளை உணராமல் சுகம் தரும் பொருளாகவே காட்சிபடுத்தப்படுகிறாள்...


சுகங்களை மட்டுமே எதிர்பார்ப்பது காதல் அல்ல... சுகம் என்ற ஒன்றை தேடி மட்டுமே சோகமாகி விடுகிறது எத்தனையோ காதல்கள்...? 


அன்னையாய் அருகமர்ந்து

ஆறுதலாய் தோள் சாய்ந்து

இயல்நிலை மறந்து - (தனக்கு மட்டுமே என்று)

ஈகை திறன் மறந்து

உயிரினில் கலந்து - (ஆண்,பெண் எனும்)

ஊண் துறந்து - (காதல்)

எண்ணங்களில் லயித்து - (வாழ்வின்)

ஏக்கம் கொண்டு

ஐயம் தவிர்த்து - (ஈரூயிர்)

ஒன்றாய் கலந்து

ஓயாத இன்னல்களிலும்

ஔடதமாய் காதல் இருக்கும்....


உயிரால் மெய்காணும் ஒர் உணர்வே காதல்.... 


என தர்க்கம் செய்யும் மனதை ஆறுதல் படுத்த யேசுதாஸ் குரல்


கண்ணே கலைமானே என


காதல் கொண்டேன் 

கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் 

கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன் 

எந்நாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி 

நீதான் என்றும் என் சந்நிதி...


என தன் சித்தமெங்கும் காதல் கொண்டு, காதலிக்கான தாய்மையோடான தாலாட்டு...


இந்த உயிர் உனக்கானது, 

உன் உயிரை சுமந்தே உயிர்வாழ்கிறேன்...

என் உயிரை நீ கொணர்ந்து உயிர்வாழ்கிறாய்...

உன் உடலுக்குள் உள்ள

என் உயிரை தந்து 

முழுமையடைந்திட செய்....


அதை நீ மறுத்தாலோ, 

மறந்தாலோ

முழுமையற்றவனாகவே 

வாழ நேரிடும்...

அரை மனிதனாய் 

நிம்மதி கொள்ள முடியாது...

என் உயிர் சுமக்கும் 

நீயே என் உயிர் உறையும் சந்நிதி என்கிறார்...


உருவமற்ற நம்பிக்கையுணர்வே கடவுள்... அது போல உயிரும் கடவுள் தான்.... அதையே ஆத்மா என்கிறது ஆன்மீகம்...!


              _ தொடர்ந்து பயணப்படுவோம் காதலோடு…


                               - சாய்.S.சுரேஷ் குமார்

                                     +91 - 8344 00 2855



Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்