பயணங்கள் முடிவதில்லை

 #பயணங்கள்_முடிவதில்லை...


வெகுநாட்களுக்கு பிறகு, நேற்றைய இரவில் ஒரு தொலைதூர பயணம்....


நிலவின் அழகை ரசித்தப்படி, மௌனங்களின் சாலை, இளையராஜாவின் துணையோடு வாகன நெருக்கடி இல்லாமல் நெடுஞ்சாலையில் பயணம் 

செய்யும் ஆசை உண்டு...


நேற்றிரவே அப்படிப்பட்ட வாய்ப்பமைந்தது....


விநாயகனே வினை தீர்ப்பவனே எனும் சீர்காழியின் குரலில் தொடங்கி மகிழ்வூந்தை இயக்குகிறார் ஓட்டுநர்... 


சிவமயமாக தெரிகிறதே என பாலசுப்பிரமணியனும், மாணிக்கவல்லி ஆடுகிறாள் என யேசுதாஸூம், ஆயர்பாடி மாளிகையில் என்று கண்ணனுக்கும், சங்கரனின் மைந்தனுக்கு தாலாட்டு என முருகனுக்கும், தன் காந்த குரலால் தாலாட்டுகிறார் பாலசுப்பிரமணியன்....


அடுத்து வளையோசை கலகல கலவென என கவிதைகள் படித்திட தென்றல் காற்றை வீச செய்து, கண்ணிற்கு தூக்கத்தையும், மனதிற்கு நினைவுகளையும் மீட்டுதர தயாராகிறார்...


ஆனால் நினைவுகள் நிஜங்களாக மாறியவர்களுக்கு தூக்கம் தரும் அருமருந்து பாடல்தான்... ஆனால் நினைவுகள் நினைவுகளாகவே தொடர்பவர்களுக்கு தூக்கம் தொலையும்....


லதா மங்கேஷ்கரின் குரலில்...,


உன்னை காணா துருகும் நொடி நேரம்

 பல மாதம் வருடம் என மாறும்...


என்ற வரிகளை உருவகிக்காத காதலர்களே உலகில் இருக்க முடியாது...


ஆனால் காதலிக்கும் போது, மனதின் மனநிலை அதுவாக இருந்தாலும்....

அந்த காதலை வாழ்க்கையாக பெற்றவர்களிடம் அது தொலைந்திருக்கிறது, தொலைந்தது தெரிந்தும் தேட முயல்வதில்லை... 


காதலை நினைவுகளாக பெற்றவர்கள் அதை தொலைத்திருக்கிறார்கள், தொலைந்த இடத்தை தவிர வேறெங்கோ தேடி கொண்டிருக்கிறார்கள்... என நினைப்பதற்கு முன் அடுத்த பாடல் தயாராகிறது...


மனோ,சித்ரா குரலில்...,


ஓ பிரியா,பிரியா என....


இறந்தாலே இரவாது விளைகின்ற பிரேமையே....

அடி நீயே வழியாக வருகின்ற பெண்மையே..... என்ற வரிகளும் தான்...


மரணம் வந்தாலும், உன்னை மறக்க மாட்டேன், என் வாழ்க்கை முழுதும் வழித்துணையாக நீயே வேண்டும்....இந்த வார்த்தைகள் மட்டும்,இன்றைய உலகில் சாத்தியமா...? 


வாழ்க்கை துணையாக இருப்பார்களா தெரியாது, மரணம் வரை மறக்க முடியாத ஏதோ ஒரு நினைவை தந்துவிடுகிறது... நினைப்பதே இல்லை என்பதெல்லாம் அவர்களை அவர்களே ஏமாற்றும் வேலை...


ஒரு கோடி நட்சத்திர கூட்டமிருந்தாலும், நிலவின் வருகை/மறைவு தனித்துவம் பெற்றது போலான நிகழ்வு அது... 


வளரலாம்,தேயலாம் 

வராமல் கூட போகலாம், ஆனால் அதன் நினைவுகளை விட்டு செல்லுமே நிலவு,அது போலத்தான்...!


மீண்டும் சித்ரா, ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்....


இந்த பாடல்,என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட பாடல்....


நீ பார்க்கும்பொது பனியாகிறேன்

உன் மார்பில் சாய்ந்து 

குளிர் காய்கிறேன்

எது வந்த போதும் 

இந்த அன்பு போதும்.....


இந்த வரிகள் முடியும் போது, கண்ணீரில் சில துளிகள் 

கன்னம் நனைத்தது...


என் ஆண்மைக்குள்ள 

தாய்மையை 

உணர செய்தவளின் 

நினைவுகள்...


விழிநீர் வழியே விழுகிறாய்...என்னுயிரே...!


எப்பேற்பட்ட நெருப்பும்

பனியாவது தாயிடமே...

நெருப்பாகவே இருந்தாலும் 

பனியாகிய பின்

தேவை அன்னையின் 

அரவணைப்பின் உஷ்ணம்....

அந்த அரவணைப்பு 

எதையும் எதிர்கொள்ளும் 

துணிவை தரும்...


பெரும்பாலும் 

பெண் குழந்தைகளுக்கு

தாய்மையின் ஸ்பரிசம்

நெடுநாள் நீடீப்பதில்லை...

அந்த தாய்மையோடான 

துணையை எதிர்பார்க்கிறாள்...

அவள் தாய்மையே அடைந்து

முதுமை கண்டாலும்

தன்னை சேயாக்கி கொள்ளும்

தாய்மையை துணைதேடுகிறாள்...

அந்த தேடலில் ஒருபோதும்

கிடைக்காமல் போய்விடுகிறது தாய்மை...!


பெண் பிள்ளைகளின் 

காதலை( தகுதியான நபராக இருந்தால்)

அம்மாக்கள் பெரிதாக எதிர்ப்பதில்லை... 

காரணம் பெண்களின் எதிர்பார்ப்பை

பற்றி பெண்ணினம் அறியும்...

தன் மகளுக்காவது அந்த தாய்மையோடான துணை கிடைக்கட்டும் என்ற 

எண்ணத்தின் வெளிப்பாடு..!


அப்பேற்பட்ட தாய்மையோடான துணை அமைந்தால், 

அந்த துணையே அவளின் குலதெய்வம்...என இந்த பாடலுக்கு மட்டும் எத்தனை நெடிய விளக்கம் தந்த நினைவுகளோடு 

கன்னம் நனைத்தது விழிநீர்....


இந்த வரிகள் இன்னும் இரு கண்களுக்கு நீர் தருமென்று, இன்னும் திடமாக நம்புகிறேன்...!


அந்த கண்ணீர் துடைக்கும் முன் மறுபடி, இம்முறை ஜானகி குரல், பாலசுப்பிரமணியனோடு....


மலரே மௌனமா என்றது....


பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ...

மீதி ஜீவன் உன்னை பார்த்த போது வந்ததோ...


எப்பேற்பட்ட வரிகள் அவை...


ஆணோ, பெண்ணோ வாழ்க்கை முழுமையடைவது ஆணிடம் பெண்மையும், பெண்மையிடம் ஆண்மையும் உணரப்படும் போது தான்...


ஆண், பெண்ணின் இயல்புகளாக கருதப்படும் தாய்மை வரை உணர்ந்த பிறகே வாழ்க்கை முழுமையடையும்...


பெண், ஆணின் இயல்புகளாக கூறும் எதையும் எதிர்கொள்ளும் நிலையை உணர்ந்த பிறகே முழுமையடைகிறாள்...


பெண் தான் எதிர்பார்க்கும் தாய்மையோடான துணையையும், ஆண் தான் துவழும் வேளையில் எதையும் எதிர்கொள்ளத்தக்க துணையையும் துணை கொள்வதே இல்லறத்தை முழுமை செய்யும்...


இங்கு பலரது வாழ்வு வாழப்படாமலேயே முழுமையடையாமலேயே முடிந்துவிடுகிறது..!


அத்தகைய முழுமையற்றவளாக இருப்பவளின் எதிர்பார்ப்புக்கேற்ற தாய்மையை தன் இணையிடம் கண்டதும் வெளிப்படுத்தும் வரிகள் இவை...


என் விழிக்குள்ளும் வற்றாத வியர்வை சுரப்பிகள் கன்னம் நனைக்க கைக்குட்டை ஈரமானது....மனதும் தான்....


                    _ தொடரலாம் காதலோடு…


                               - சாய்.S.சுரேஷ் குமார்

                                  +91 - 8344 00 2855



Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்